கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷும், சாய்பாபா காலனியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணும் இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி, காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், வீட்டை விட்டுச் சென்ற பெண் இரண்டு நாட்கள் ஆகியும் காணாததால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சந்தோஷின் நண்பரான விக்னேஷிடம் பெண்ணின் வீட்டார் விசாரித்துள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சரிவர பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் விக்னேஷை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. மேலும், விக்னேஷின் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளார். இதனால், காயமடைந்த விக்னேஷ் உக்கடம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் அப்பாஸ் மீது புகாரளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் கோட்டை அப்பாஸை வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும், கோட்டை அப்பாஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்துவதைக் கண்டித்து, உக்கடம் காவல் நிலையத்தின் முன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:கோவிட்-19 நெருக்கடியை பயன்படுத்தி தொழிலாளர் உரிமைகளை பறித்துள்ள பாஜக அரசு!