தமிழ்நாடு

tamil nadu

எதிர்கால திட்டங்களை பட்டியலிட்ட கோவை மாவட்ட வேட்பாளர்கள்

By

Published : Mar 27, 2021, 6:02 AM IST

கோவை: தென்னிந்திய வர்த்தக சபை அரங்கில் சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திட்டங்களை வரிசைப்படுத்தினர்.

எதிர்கால திட்டங்களை பட்டியலிட்ட கோவை மாவட்ட வேட்பாளர்கள்
எதிர்கால திட்டங்களை பட்டியலிட்ட கோவை மாவட்ட வேட்பாளர்கள்

கோவை அவினாசி சாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபை அரங்கில் சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அமுமுக வேட்பாளர் சேலஞ்சர் துரை, சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக், மநீம வேட்பாளர் மகேந்திரன், வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், "மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் வசதி தீர்த்து வைக்கப்படும். பாதுகாப்பு நலன் கருதி தொகுதி முழுவதும் சிசிடிவி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில்துறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டெக் பார்க் அமைக்கப்படும்.

இதன் மூலம் தங்க நகை தொழிலை மேம்படுத்தலாம். இரண்டாவது அரசு மருத்துவமனை அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

பின்னர் பேசிய சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் நா.கார்த்தி, "கிடப்பில் போடப்பட்டு உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். சூயட் ஒப்பந்தம் ரத்து செய்யபடும். சிறு, குறு தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் பாலமாக இருந்து 24 மணி நேரமும் செயல்படுவேன்" என்றார்.

மநீம வேட்பாளர் மகேந்திரன் பேசும்போது, "இங்கு விவசாயம் சிறக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இங்கு ஆளும் அரசுகளும் ஆண்ட அரசுகளும் குளங்களை பரமரிக்கவில்லை. தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பேசுகையில் "தொழில்துறையின் வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசின் பாலமாக செயல்படுவேன்" எனத் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் கோவையை சேர்ந்த பல்வேறு தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details