கோவை பிரபல ரவுடி கெளதம் வெளியிட்டுள்ள வீடியோ கோயம்புத்தூர்:கோவையில் பிரபல ரவுடியாக கருதப்பட்டு வரும் கௌதம் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவர் அவரது குடும்பத்தினர் மூலம் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று (மார்ச் 1) ரத்தினபுரி காவல் துறையினர் கௌதமின் மனைவி மோனிஷா, மனைவியின் சகோதரி தேவிஸ்ரீ மற்றும் தாயார் பத்மா ஆகியோரை கைது செய்தனர்.
கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள கெளதமின் மனைவி, மனைவியின் சகோதரி மற்றும் தாய் அப்போது அவர்களிடமிருந்த கார் ஒன்றில் 1,500 கிராம் கஞ்சா மற்றும் 4,000 ரூபாய் பணம் உள்பட வீட்டில் இருந்த எடைபோடும் இயந்திரம், இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் கஞ்சா விற்று அவர்கள் வாங்கியதாக, சுமார் 10 சவரன் நகையும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கௌதம், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள கெளதம், "நான் இதற்கு முன்னர் 8 வருடங்களாக அடிதடியில் ஈடுபட்டு வந்தேன். தற்போது திருமணமாகி நான்கு ஆண்டுகளாக ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன்.
ஆனால், தற்போதும் என் மீது சில வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் என்னை என்கவுன்ட்டர் செய்து விடுவதாக கூறுகிறார்கள். எனது மனைவியை அவரது தாயார் வீட்டில் விட்டிருந்த நிலையில், அவர்களையும் கஞ்சா விற்ற வழக்கின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனது மனைவி கர்ப்பமாக உள்ளார்.
காவல் துறையில் இருக்கும் காவலர்களே என்னைச் சுட்டு விடுவார்கள் என தகவல் தெரிவிக்கிறார்கள். காவல் நிலையத்தில் சரண் அடைய வேண்டாம் எனவும், நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்குச்சென்றாலும், அங்கும் உன்னை கொன்றுவிடுவார்கள் எனவும் கூறுகிறார்கள். எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. நான் வாழ வேண்டும் என விரும்புகிறேன்.
வேண்டுமென்றே, எனது குடும்பத்தினர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். நான் கடந்த நான்கு வருடங்களாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் வாழ்ந்து வரும் நிலையில், என்னை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் சரவணம்பட்டி மற்றும் ரத்தினபுரி காவல் ஆய்வாளர்கள் தன்னிடம் செல்போனில் பேசியதாக ஒரு ஆதாரத்தையும் அவர் காண்பித்துள்ளார்.
இதையும் படிங்க:நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்; வழக்கு பதிவு செய்யாமல போலீஸ் அலட்சியம்