கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம், அப்பகுதி பொதுமக்கள் மண்டியிட்டு மனு அளித்தனர் கோயம்புத்தூர்:ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (பிப்.20) காந்திநகர் பொதுமக்கள் வந்தனர். அவர்கள், தாங்கள் கொண்டு வந்த மனுவை மண்டியிட்டு அளித்தனர். இவ்வாறு காந்திநகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்காக அப்பகுதி மக்களின் நிலங்கள் மாவட்ட நிர்வாகத்தால் கடந்த ஆட்சியிலிருந்து கையகப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பின்போது, கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் வழங்குவோருக்கு மாற்று இடம் வாங்குவதற்கான தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காந்திநகர் பகுதி மக்களின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய மனுதாரர்கள், அவை குறைந்த அளவில் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், மேலும் கடந்த ஆட்சியாளர்கள் கையகப்படுத்தி விட்டதாகவும், அவ்வாறு கையகப்படுத்தும்போது உறுதியளித்தபடி உரியப் பணமோ அல்லது மாற்று நிலமோ இதுவரை வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேநேரம் இன்றைய நாட்களில் நிலத்தினை கையகப்படுத்தும்போது, இன்றைய நிலவரப்படி இழப்பீடு வழங்காமல், 7 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்க ஒப்புக்கொண்ட இழப்பீட்டையே வழங்குவதாகவும், இது தற்போதைய பொருளாதார நிலையில் ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் அளித்த இழப்பீட்டைக் கொண்டு மாற்று இடத்தில் வீடு கட்ட இயலாத சூழ்நிலையில், தற்போது தாங்கள் குடியிருக்கும் வீட்டையும் காலி செய்யுமாறு அதிகாரிகள் வற்புறுத்துவதாக வருத்தத்துடன் கூறியுள்ளனர். எனவே தாங்கள் இங்கேயே குடி இருக்க மேலும் ஆறு மாத காலம் அனுமதி அளிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராகப் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 200 நாளாக போராட்டம்.. விவசாயிகளை சந்திக்க சென்ற வெற்றிச்செல்வன் கைது.. அரசியல் தலைவர்கள் கண்டனம்..