காரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதில் காவல் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணியில் உள்ள காவல் துறையினரை உயர் அலுவலர்கள் அவ்வப்போது சந்தித்து அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா இன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் உள்ள காவல் துறையினரை நேரில் சந்தித்து, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அந்த வகையில், கணியூர் சுங்கச் சாவடியில் இருந்த கருமத்தம்பட்டி காவல் துறையினரை சந்தித்த மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் பெரியய்யா மற்றும் காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர், பணியில் இருந்த காவலர்களுக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.