கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த சில தினங்களுக்கு பறிமுதல் செய்யப்பட்ட புலி தோல் நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட எடக்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில், கொல்லப்பட்ட புலியின் உடையது என்பது தெரியவந்துள்ளது. இந்த புலியொ தாக்கி கொன்று தோலை கடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து புலித்தோல் வைத்திருந்தவர்கள் பஞ்சாப்பை சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59), ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் (50) என்பதும் இவர்கள் பவாரியா கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் பிடிபட்ட நான்கு பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சமதளங்களில் மட்டுமே இது போன்ற வேட்டைகளை நடத்திய பவாரியா கும்பல் முதல் முறையாக மலைப்பகுதியில் புலி வேட்டை நடத்தி உள்ளனர்.
இவர்கள் ஹரியானா எல்லை பதான்கோட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேச எல்லையில் உள்ளனர். இந்த பவாரியா குழுவைச் சேர்ந்தவர்கள் எமரால்டு பகுதியில் தங்கியிருந்தனர். தோட்டத்து வேலை, காய்கறி விற்பனை, கம்பளி விற்பனையில் ஈடுபட்டு தமிழ் கற்றுக் கொண்டனர். அங்கேயே தங்கி இருந்து புலி நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர். யானைகள் அந்தப் பகுதியில் இல்லாததால் சாதகமாக பயன்படுத்தி உள்ளனர்.
இதை தொடர்ந்து மலைப்பகுதியிலும் கண்காணிப்பு அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு வேட்டை தடுப்பு முகாம் அமைக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. 15 நாட்கள் அங்கு தங்கி அந்த பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அந்த பகுதியில் புலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கோரகுந்தா, தெற்கு வனச்சரகம், பார்சன் வேலி, பைகாரா, ஆகிய வனச்சரகங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும்.
ஏற்கனவே முக்குறுத்தி தேசிய பூங்காவில் அதிக பாதுகாப்பு உள்ளது. பாதுகாப்பு அதிகரித்தால் இதுபோன்ற நடவடிக்கை தவிர்க்க முடியும். புலி வேட்டையை நான்கு பேர் மட்டுமே வனத்தில் தங்கி பணியை கண்காணித்து வேட்டையாடியுள்ளனர். புலி இருக்கும் இடத்தை கண்டறிந்து அங்கு போய் தங்கி வேட்டையாடி உள்ளனர். இனிமேல் இந்த பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் 5 பேர் தங்கும் அளவு கூடாரம் அமைத்து தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கிகள், வாக்கிடாக்கி, செல்போன் வழங்கப்படும். வனப்பகுதிக்குள் ரோந்து சென்ற பின்னர் ஒவ்வொரு பகுதியை குறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
வழக்கமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்காணிப்பு கேமரா வைக்கப்படும். இனிமேல் இந்த பகுதிகளில் வருடத்திற்கு ஒருமுறை கண்காணிப்பு கேமரா வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினர் நடமாட்டம் அதிகமாக இருந்தால் வெளி ஆட்கள் யாரும் வர மாட்டார்கள். ஒரு வனச்சரத்துக்கு நான்கு பேர் இந்த முகாமில் தங்கி இருப்பார்கள் என தெரிவித்தனர். புலி வேட்டையை தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சந்தேகப்படும் படி நடந்து கொள்ளும் வட மாநிலத்தவர் குறித்து வனத்துறையினர் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் எதிரொலிக்கும் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை: பஞ்சாப் அரசியலில் ஏற்படும் தாக்கம் என்ன?