கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள வக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மகள் லாவண்யா. இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவருடன் திருமணம் ஆன நிலையில், சமீபத்தில் கர்ப்பமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் தந்தை சசிக்குமாரும், லாவண்யாவும் கடந்த மார்ச் 28ஆம் தேதி காலையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, அதிமுக ஊராட்சித் தலைவர் ரவி என்பவர், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், வெளியே வந்ததற்கு அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து லாவண்யாவும் சசிக்குமாரும் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக ஊராட்சித் தலைவர் ரவி, மதுபோதையில் அவரது நண்பர்கள் ஆறு பேருடன் கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று லாவண்யா, கணவர் தர்மராஜ், தந்தை சசிக்குமார் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில், லாவண்யாவின் கருக்கலைந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.