சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தனியாக இருக்கும் வயதான பெண்களை குறிவைத்து நகைகளை நூதனமாக திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் தனியாக நிற்கும் வயதான பெண்களிடம் ஆட்டோவில் வரும் மூன்று பெண்கள் எங்கு செல்ல வேண்டும் என்ற கேட்டு தாங்கள் அந்தப் பகுதி வழியாக செல்வதாக கூறி அவர்களுக்கு லிப்ட் கொடுப்பார்கள். வயதான பெண்களும் அவர்களின் பரிவான வார்த்தைகளை நம்பி ஆட்டோவில் ஏறிச்செல்வர்.
ஆட்டோவில் முதியவர்களுடன் பயணம் செய்யும் மூன்று பெண்களில் இருவர் நடுத்தர வயதினராகவும், ஒருவர் கல்லூரி மாணவி போலவும் உடையணிந்திருப்பர் எனவும், பயணத்தின்போது முதியவர் அணிந்திருக்கும் நகைகளைப் பற்றி விசாரித்து நகை அறுபடும் நிலையில் இருப்பதாக கூறி பத்திரமாக பையில் கழற்றி வைத்து கொள்ளுமாறு கூறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
முதியவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், ஆட்டோவிற்கான கட்டணத்தையும் வேண்டாமென்று கூறி சென்று விடுவர். இறங்கிய பின் பையை சோதித்து பார்த்த பிறகே தங்கள் பையில் நகை இல்லாததையே கண்டறிவார்கள். ஆட்டோவில் உடன்வந்த பெண்கள் நாடகமாடி நகையை திருடியிருப்பது பின்னரே தெரியவரும்.