பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவினால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 26 ஆம் தேதி நடைபெறவேண்டிய தேர்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 24 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வு நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்பது தெரியாத நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.
கரோனாவின் தாக்கம் குறையாமல், அதன் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டத்தை ரத்து செய்து, அந்தந்த மாவட்ட அளவில், பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப தேர்வை நடத்தி முடிக்கலாம் என கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வந்தால் மட்டுமே முதலமைச்சர் அறிவித்தபடி தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது.
144 தடை உத்தரவு ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டாலோ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவோ, அல்லது காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சியை வழங்குவோ கல்வித்துறை முடிவு எடுக்கவும் வாய்ப்புள்ளது. கரோனா தொற்று ஒரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்தால் மாணவர்கள் படித்தப் பள்ளியில் வைத்தே தேர்வினை நடத்துவது குறித்தும் பள்ளிகல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க:ஊரடங்கை கடுமையாகப் கடைப்பிடிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல்