சென்னை:தமிழ்நாட்டில் தேர்தலுக்கான தேதிகள் நெருங்கிவருவதால் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்துவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் மற்றும் நிர்வாகிகள் கடந்த 7ஆம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ராமநாதபுரம், கடையநல்லூர், வாணியம்பாடி ஆகிய மூன்று தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிவித்த அதிமுக தலைமை இதுவரை எந்த முடிவையும் எட்டவில்லை.
இதற்கிடையில், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக்தாவூத் பேசுகையில், "அதிமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை பெறுவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துடன் நேற்றும் இதுதொடர்பாக பேசினோம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறோம். நாங்கள் கேட்ட மூன்று தொகுதிகள் கிடைக்கும் என நம்புகிறோம். பேச்சுவார்த்தைக்கு பின்னர் எங்களின் முடிவினை அறிவிப்போம்" என்றார்.
ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியைத் தவிர்த்து அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 223 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இஸ்லாமிய கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.