தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவு, இந்த வாரம் இறுதி அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

By

Published : Jul 5, 2021, 7:52 PM IST

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக, 2020-21ஆம் கல்வி ஆண்டில் படித்த 10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே மாதம் தேர்வு நடத்துவதற்குத் தேர்வுத் துறை தயாரானது. ஆனால், கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததால், மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என, ஜூன் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டுக் குழுவையும் நியமித்தார். அந்தக்குழு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த அறிக்கையை ஜூன் 25ஆம் தேதி முதலமைச்சரிடம் வழங்கியது.

அதனை ஆய்வுசெய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்குரிய முறைகளை வெளியிட்டார்.

அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 விழுக்காடு, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துத் தேர்விலிருந்து 20 விழுக்காடு மதிப்பெண், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு, அக மதிப்பீட்டிலிருந்து 30 விழுக்காடு மதிப்பெண் கணக்கிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், கடந்தாண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டு இருந்தாலோ, அந்த மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வெளிமாநிலங்கள், வேறு பாடத் திட்டங்களில் பத்தாம் வகுப்பு படித்து, தற்போது 12ஆம் வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களை அரசுத் தேர்வுத் துறை, பள்ளிகளிலிருந்து பெற்றுள்ளது.

அரசுத் தேர்வுத் துறையின் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்வு இல்லாமல் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு, அரசு உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.

அரசு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளைக் குறிப்பிட்டு அரசாணை விரைவில் வழங்கும் என அரசுத் தேர்வுத் துறை எதிர்பார்த்துள்ளது.

இருப்பினும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாரத்திற்குள்ளோ அல்லது அடுத்த வாரமோ தேர்வு முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முதலமைச்சர் பல்வேறு துறைச் செயலர்களுடன் இன்று(ஜூலை 5) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details