சென்னை:சென்னை மெரினா கடற்கரை அருகில் அண்ணா சதுக்கத்தில் 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்க பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில் மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.பேருந்துகள் நின்று செல்வதற்கு இடம் மட்டுமே இருந்த நிலையில் நிழற்குடையுடன் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் அண்ணா சதுக்க பேருந்து நிலையத்துக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க முடிவு செய்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.தற்பொழுது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் இனி வெயில் மழைக்காலங்களில் பயணிகள் சிரமம் மின்றி பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும், மேலும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைத்தார்.