கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலின் போது முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். நவம்பர் மாதத்திற்கு பின் கரோனா பரவலின் தாக்கம் குறையத் தொடங்கியது.
பின்னர் தொழிற்சாலைகளுக்கு அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், 45 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை அரசிடம் இருந்து வரவில்லை.
திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதேபோல் சென்னை மெட்ரோ ரயில், வாகன உதிரிபாக தொழிற்சாலை என புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 10 விழுக்காடு கூட அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறைவு பெறவில்லை.
கரோனா வீழ்ச்சியில் இருந்து தற்போது தான் தொழிற்துறை மீண்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் கரோனா இரண்டாம் அலை பரவ ஆரம்பித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக ஜவுளித்துறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் தினக்கூலி அடிப்படையில் தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல் சிறு குறு தொழிலாளர்களில் 80 விழுக்காடு பேர் 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் அனைவருக்கும் உடனே போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியை அரசு தொடங்க வேண்டும்.