சென்னை நகரின் மையப்பகுதியில் விருகம்பாக்கம் தொகுதி அமைந்துள்ளது. 2009ஆம் ஆண்டு வில்லிவாக்கம், ஆலந்தூர் தொகுதிகளிலிருந்து விருகம்பாக்கம் தொகுதி தனியாகப் பிரிக்கப்பட்டது.
வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், சின்மையா நகர், குமரன் காலனி, நடேசன் நகர், விஜயராகவா நகர், வேம்புலி அம்மன் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெரு, கோயம்பேடு, கே.கே. நகர், நெசப்பக்கம், அசோக் பில்லர், ஜாபர்கான் பேட்டை உள்ளிட்டவை விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள முக்கியப் பகுதிகளாகும்.
கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறிச்சந்தை, வடபழனி முருகன் கோயில், ஏவிஎம் ஸ்டுடியோ, அசோகர் தூண் ஆகியவை இந்தத் தொகுதியின் அடையாளமாக விளங்குகின்றன. மேலும் ரோஹினி, கமலா, காசி, உதயம், ஐநாக்ஸ், பலாஜோ, ஃபோரம் மால் என ஏராளமான பொழுதுபோக்குத் தளங்களும் இங்கு உள்ளன.
சென்னை மாநகராட்சியின் 65 மற்றும் 128 முதல் 131 வரையிலான வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகள் விருகம்பாக்கம் தொகுதியின்கீழ் வருகின்றன. இந்தத் தொகுதியில் தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 167 ஆண் வாக்களர்களும், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 961 பெண் வாக்காளர்களும், 90 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என ஒட்டுமொத்தமாக இரண்டு லட்சத்து 91 ஆயிரத்து 218 வாக்காளர்கள் உள்ளனர்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.என். ரவி, திமுக வேட்பாளர் தனசேகரனை வீழ்த்தி இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றார். தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், இந்தத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு மூன்றாவது இடம்பிடித்தார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவைச் சேர்ந்த பார்த்தசாரதி இங்கு வெற்றிபெற்றார். விருகம்பாக்கம் தொகுதியில் சிறப்பான போக்குவரத்து வசதி உள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் சாலைப் போக்குவரத்து வசதி, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் வசதி ஆகியவை உள்ளன.
வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு, அசோக் பில்லர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளன. கோடம்பாக்கம், மாம்பலம், சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் இதற்கு அருகில் உள்ளன.