சர்ச்சையில் சிக்கிய நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள வீடியோ சென்னை: சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் அரங்கத்தில் வைத்து கவுரவ டாக்டர் பட்டம் என்னும் பெயரில் வழங்கியிருந்தது. இதில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, சாண்டி மாஸ்டர், ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்னும் பெயரில் வழங்கப்பட்டது.
ஆனால், இவை அனைத்தும் போலி என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நேற்று (மார்ச் 1) செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், “இந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த நிகழ்ச்சி நடத்த முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற திரை பிரபலங்கள் இதில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஏமாற்றம் அடைந்துள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்” எனக் கூறினார். இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு திரைத்துறையினருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு நடிகர் பார்த்திபன், ராதாரவி, சமையல் கலைஞர் தாமு உள்ளிட்ட பலருக்கும் இந்த அமைப்பு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளது.
இதனிடையே விழா ஏற்பாட்டாளர் ஹரிஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எங்கள் அமைப்பிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு உரிமை இருக்கிறது. அதன்படிதான் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. தற்போது எழுந்துள்ள பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை'' எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க:வடிவேலு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர் பட்டம்? - அண்ணா பல்கலை. துணைவேந்தர் விளக்கம்