தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவின் கருவூலம்' உறங்கியது -ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வசந்தி ஸ்டான்லி மறைவு

By

Published : Apr 28, 2019, 11:34 AM IST

Updated : Apr 28, 2019, 11:42 AM IST

திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவுக் காரணமாக காலமானார். அவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் சிறுபான்மை அணித் தலைவருமான வசந்தி ஸ்டான்லியின் திடீர் மறைவு என்ற துயரச் செய்தி என்னை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'.

'கருணாநிதியால் 'கழகத்தின் கருவூலம்' என்று பாராட்டப்பட்டவர். கழகத்தின் பேச்சாளராக மட்டுமல்ல தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் கழகத்தின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிப் பணியிலும், மக்கள் பணியிலும் சிறப்பாகவும், செம்மையாகவும் பணியாற்றியவர். 'கலைஞர் 87' என்ற நூல் தொகுப்பினை அவர் வெளியிட்டபோது, அந்த நூலில், 'அப்பா! என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில் விழியோரம் ஒரு சொட்டு நீர் உருண்டு வரும். அது உங்கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனை நான் அடைத்த பாக்கியத்தை அடைவேன் அப்பா!' என்று உணர்ச்சி பொங்க, ஒரு கழகத் தொண்டருக்கே உரிய பாசத்தில் எழுதி, கருணாநிதி மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தவர்'.

'கழகத்தின் செயல் வீராங்கனையாகத் திகழ்ந்த அவர் இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் அவரின் உழைப்பும் உண்மைத் தொண்டு பணி எல்லாம் என்றைக்கும் கழகத்தில் உள்ள கடைக்கோடி தொண்டனுக்குக்கூட நினைவில் நிற்கும். வசந்தி ஸ்டான்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.

Last Updated : Apr 28, 2019, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details