இதுகுரித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த 26 வயது இளைஞர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ்(56), காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, கோவில்பட்டி கிளைச் சிறையில் பூட்டப்பட்ட நிலையில், நேற்றிரவு பென்னிக்ஸும், இன்று காலை அவரது தந்தை ஜெயராஜும் இறந்துவிட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடையை அடைக்கக் கோரி காவல்துறையினருக்கும், கடை உரிமையாளரான பென்னிக்ஸுக்கும் ஜூன் 19 ஆம் தேதி மாலையில் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அதனையொட்டி சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்களும் சேர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, காவலர்கள் சிலர் துணையோடு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதோடு, காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிந்து, கைது செய்து, ஜூன் 20ஆம் தேதியன்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
குற்றவியல் சட்டம் 176(1)(ஏ) பிரிவின்படி குற்றவாளிகளைச் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் இங்கு எழுகிறது. தாக்கப்பட்டவர்களை நேரில் பார்க்காமலேயே நீதிபதி ரிமாண்ட் செய்திருக்கிறார். கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜ் அவர்களின் ஆசனவாயில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையே காவல்துறை தாக்குதலில் நிலைகுலைந்திருந்த பென்னிக்ஸ் நேற்று 22 ஆம் தேதி மாலை கோவில்பட்டி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.