மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இறந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
'காற்றுள்ளவரை கருணாநிதியின் புகழ் நிலைத்திருக்கும்'
சென்னை: இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கும் கருணாநிதியின் புகழ் காற்றுள்ளவரை நிலைத்திருக்கும் என்று வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணா மறைவுக்கு பிறகு திமுகவை எஃகு கோட்டையாக உருவாக்கி கட்டிக் காத்தவர் கருணாநிதி. நெருக்கடி காலத்தில் கழகத்தை கட்டிக் காத்தவர், நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிற்கே வழிகாட்டியத் தலைவராக இருந்தார்.
இறப்பதற்கு முன் அவரை சந்தித்து ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொன்னேன், திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அண்ணாவின் கனவுகளை நனவாக்குவோம். காற்றுள்ளவரை கருணாநிதியின் புகழ் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.