சென்னை: சென்னைக்கு அருகில் உள்ள ராயபுரத்தில் உள்ள மத்திய மீன்வள கடல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் ஸ்வச்தா பிரசாரம் 2.0(Swachhta Campaign)கீழ் செயல்பாடுகளை மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், மயிலாடுதுறை அருகே வீரவேல் என்னும் தமிழ்நாடு மீனவர், இந்திய கடற்படையினரால் சுடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர், 'தமிழ்நாடு மீனவர் சுடப்பட்ட விவகாரத்தில் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை வந்தபின்னர்தான் நான் பதிலளிக்க முடியும். அறிக்கை கிடைத்த பின்னர், அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு மீனவர்களுடைய படகுகளிலும் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த வேண்டும். ஆனால், சில நேரங்களில் மீனவர்கள் எல்லை தாண்டுவதும் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது நடந்துள்ள சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை வந்தபின்னர்தான் அதுகுறித்து சொல்ல முடியும்.
திசைகாட்டுதல் தொடர்பாக மீனவர்களை எச்சரிக்கும் விதமாக ஏற்கெனவே நம்முடைய தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. மீனவர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கும் தெரியும், காலங்காலமாக அவர்கள் கடலுக்கு சென்றுவருவதாலும்கூட சிலநேரங்களில் அது மாறக்கூடும். மீனவர் நலன் என்பது மாநிலத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனாலும், இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது" எனக்கூறினார்.
இதையும் படிங்க: மின்சார கண்ணா - அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்தநாளுக்கு திமுகவினர் ஒட்டிய ஷாக் போஸ்டர்கள்