சென்னை:சென்னைக்கு அருகே உள்ள கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகளின் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் இன்று நடத்தியது.
‘கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். மாணவர்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சதுப்புநில காடுகளுக்கு சிறப்பு கவனம் அளித்து, நடைபெற்று வரும் “பசுமைத் திருவிழாவின்” ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடலோர பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் சமூக மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக சதுப்புநில காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் மக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளுமாறு மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். மாணவர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடையே சதுப்புநில காடுகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சதுப்பு நில தாவரங்களுக்கு உள்ளூர் மொழியில் பெயர் வைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தொகுத்துள்ள “உயிரி பன்முகத்தன்மை மற்றும் சதுப்புநில சூழலியலின் முக்கியத்துவம்” என்ற புத்தகத்தையும் மத்திய அமைச்சர் யாதவ் வெளியிட்டார். இந்தியாவிலும், இந்தோனேசியா உள்ளிட்ட இதர நாடுகளிலும் ஏற்கனவே இருந்து வரும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியாவின் கடலோர மாவட்டங்களில் சதுப்புநில காடுகளை மீண்டும் வளர்க்கும் நோக்கத்துடன் ‘மிஷ்டி’ திட்டத்தை இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.