சென்னை நொளம்பூர் அருகே சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கழிவுநீரேற்றும் நிலையம் உள்ளது. அங்குள்ள பெரிய கழிவுநீர் தொட்டியை இரும்பு கம்பிகள் கொண்டு மூடும் பணியில் பாடி என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்த கண்ணன் (45), பிரகாஷ் (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென நிலைத்தடுமாறி பிரகாஷ் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். அதனை கவனித்த கண்ணன், அவரைக் காப்பாற்ற முயன்ற போது அவரும், விஷவாயுவை நுகர்ந்ததால் மயங்கி தொட்டிக்குள் விழுந்தார்.
இதனையடுத்து அங்கிருந்த பிற தொழிலாளர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு மேலும், இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அருவியில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு!