தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இலங்கைக்கு 28 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள்' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இலங்கைக்கு 28 கோடி மதிப்புள்ள மருந்துப்பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

By

Published : May 15, 2022, 4:21 PM IST

medicines export to sri lanka  medicines are to be sent to Sri Lanka from tamil nadu  ma subramanian  இலங்கைக்கு மருத்துவ உதவி  இலங்கைக்கு அனுப்பப்படும் மருத்துவ பொருள்கள்  மா சுப்பிரமணியன்  மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மருத்துவப்பொருள்கள்
மா.சுப்பிரமணியன்

சென்னை:இலங்கையில் நிலவும் பொருளாதாரத் தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.28 கோடி மதிப்புள்ள மருந்துப்பொருட்கள் அண்ணா நகரில் உள்ள மருந்துக் கிடங்கில் தயார் நிலையில் உள்ளதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இலங்கையில் இன்றைக்கு மக்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி பசியும் பட்டினியுமாக வாடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகமே இன்றைக்கு இலங்கையினைப் பார்த்து அனுதாபப்படுகிற, பரிதாபப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் எரிவாயு பொருளாக இருந்தாலும், அவசியமாக தேவைப்படுகிற மருந்துப்பொருட்களாக இருந்தாலும் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். இந்நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கையில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பொருளுதவி வழங்கப்படும் என்று கடந்த மாதம் 29ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை ஒன்றிய அரசிற்கு முன்மொழிந்தார்கள்.

இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தாலும், கருணை அடிப்படையில், மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்றைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிற மருந்துப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட இருக்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அத்தியவசியமான மருந்துகள், அவசியமான மருந்துகள் 137 வகையான மருந்துகளை ரூ.28 கோடி ரூபாய் மதிப்பில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

மருத்துவத் துறை தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தின் மூலம் தற்போது இலங்கைக்கு எந்தவகையான மருந்துகள் அத்தியாவசியம் மற்றும் அவசியம் என கணித்து 53 வகையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசியமான மருந்துகள் என கணித்து, முதல் தவணையாக ரூ.8 கோடியே 87 லட்சத்து 90 ஆயிரத்து 593 ரூபாய் மதிப்பில் 700 அட்டைப் பெட்டிகளில் பணிகள் பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

55 மருந்துகளில் 7 வகையான மருந்துகள் குளிர்சாதன நிலையிலும், 48 வகையான மருந்துகள் சாதாரண நிலையிலும் கொண்டு செல்வதற்கு ஏதுவாக பேக்கிங் பணிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் மருத்துவத் துறையைப் பொறுத்தவரை 3 மாதங்களுக்குத் தேவையான அவசிய, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கையிருப்பில் உள்ளது.

அண்ணா நகர் மருந்துக்கிடங்கைப் பொறுத்தவரை 35 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. ரூ.2 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு, மருந்துக்கிடங்கின் இணைப்புக் கட்டடம் ஒன்றும் தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே இது மிகப்பெரிய மருந்துக்கிடங்காகும். இங்கு மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துக் கிடங்கைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும் மருந்துக்கிடங்குகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மருந்துக் கிடங்குகளில் ரூ.240 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மற்றும் அவசியமான மருந்துப்பொருட்கள் இருப்பில் இருந்து வருகிறது.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் மருந்துக் கிடங்குகள் இல்லாத நிலை இருந்தது.

தற்போது நடைபெற்ற மருத்துவத் துறையின் மானியக் கோரிக்கையில், மாவட்டத்திற்கு தலா ரூ.5 கோடி மதிப்பில், 6 மாவட்டத்திற்கும் ரூ.30 கோடி செலவில் புதியதாக மருந்துக்கிடங்குகள் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான கட்டடங்கள் கட்டும் பணிகள் நிறைவடைந்து அங்கும் மருந்துப்பொருட்கள் இருப்பில் வைக்கப்பட இருக்கின்றன.

மேலும் உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் அதேபோல் பாடத்திட்டம் இருக்கும் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு உதவிட வேண்டும் என ஒன்றிய அரசிற்கு கோரிக்கை விடுத்தோம். ஒன்றிய அரசும் இதேபோன்ற பாடப்பிரிவுகள் இருக்கும் போலந்து உள்ளிட்ட 6 நாடுகளின் பட்டியலை வெளியிட்டு, அங்கு படிப்பு தொடர்வதற்கு நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியுள்ளனர்.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால், 2 மாதத்திற்குள் தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கான பணிகளை ஒன்றிய அரசும் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசும் அதற்கான அழுத்தத்தை கொடுத்து கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை - இலங்கை இடையே 4 விமான சேவைகள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details