கன்னியாகுமரி கடல் மற்றும் அதனையொட்டிய தென் தமிழ்நாடு பகுதிகளில் 1.5 முதல் 3.1 கிலோமீட்டர் உயரம்வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாள்கள்வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்
மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தர்மபுரி, சேலம் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே மாதம் 11,12,13 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே தினங்களில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மே 15ஆம் தேதி தமிழ்நாடு, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடுவரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெப்பமாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுநாள் (மே.10,11) தென் மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழ்நாடு கடலோர மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை இருப்பதால் மாலை முதல் காலைவரை வெப்பமாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு
- ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
- சேத்தியாத்தோப்பு (கடலூர்), குழித்துறை (கன்னியாகுமரி), நன்னிலம் (திருவாரூர்), சோலையார், வால்பாறை (கோயம்புத்தூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ஜெயங்கொண்டம் (அரியலூர்), பாண்டவையாறு (திருவாரூர்), பெரியகுளம் (தேனி) ஆகிய இடங்களில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
- தாளவாடி (ஈரோடு), எருமைப்பட்டி (நாமக்கல்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம் ) ஆகிய இடங்களில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை - தெற்கு அரபிக்கடல் பகுதியில் 5.8 கிமீ வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- வரும் மே 13ஆம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- வரும் மே 14ஆம் தேதி அன்று தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக
- வரும் மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.