தமிழ்நாடு

tamil nadu

குரூப் - 2ஏ தேர்வு முறைகேடு - இருவர் கைது

By

Published : Feb 2, 2020, 10:52 AM IST

சென்னை: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இரண்டு அரசு ஊழியர்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tnpsc arrest
Tnpsc arrest

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு கடந்த 2017ஆம் ஆண்டு தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை சுமார் எட்டு லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற 1953 நபர்கள் அரசுப் பணியில் சேர்ந்தனர். இந்தத் தேர்வில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு டிஎன்பிஎஸ்சி குறித்து சமூக வலைதளங்களில் பரவிய இக்கருத்தைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ஒரே தேர்வு மையத்தில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்த 42 அரசு ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடியிடம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரை விசாரணை செய்து இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அலுவலராக தற்போது எஸ்பி மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் டிஎஸ்பி சிவனுபாண்டியனும் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்ச்சி அடைந்த 42 அரசு ஊழியரின் விவரங்களும் ஆவணங்களும் சிபிசிஐடி காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்த 42 பேர் பற்றிய தகவல்களையும் ஆவணங்களையும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குரூப்- 2ஏ தேர்வில் காவலர் சித்தாண்டி மூலம் முறைகேடு செய்து 285 மதிப்பெண்கள் பெற்று எட்டாவது இடத்தில் தேர்ச்சி அடைந்து தற்போது காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வேல்முருகன்(30), 276 மதிப்பெண்கள் பெற்று 21ஆவது இடத்தில் தேர்ச்சி அடைந்து தற்போது திருநெல்வேலி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஜெயராணி(30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு மூளையாக செயல்பட்ட வேல்முருகனின் சகோதரர் சித்தாண்டி ஆயுதப்படை உதவி ஆய்வாளரை தீவிரமாகத் தேடிவருகின்றனர். அதே போல குரூப் 4 தேர்வில் தலைமறைவாக உள்ள முகப்பேர் பகுதியில் அமைந்துள்ள ஜெயக்குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 55 சதவீதம்தான் திருப்தி - லட்சுமி நாராயணசாமி!

ABOUT THE AUTHOR

...view details