தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரிடம் நேரில் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் ஆரம்பித்திருந்தாலும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 4 மணி நிலவரப்படி 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக 40 பதவியிடங்களும், திமுக 38 பதவியிடங்களும், தேமுதிக 1 பதவியிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 பதவியிடத்திலும், சுயேட்சைகள் 16 பதவியிடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.