தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 23) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 713 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை, 362 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 பாலங்கள் மற்றும் 2 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.
பின்னர், 1,115 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 4 சாலைப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்திலும், 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்திலும், 1 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூர் மாவட்டத்திலும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்திலும் கட்டப்பட்ட பாலங்களைத் திறந்துவைத்தார்.