சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை 8 மணிக்கு மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்று ரஜினி அறிவித்து, இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் இந்த சந்திப்பானது முக்கியமாகப் பார்க்கப்பட்டது.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதியக் கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் அளித்த பேட்டி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதாவது, 'தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
நிர்வாகிகளுடன் பேசும்போது," சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் கண்டிப்பாக போட்டியிடுவோம். ஆனால், நிச்சயமாக நான் முதல்வராக மாட்டேன். எனக்கு அந்த விருப்பம் இல்லை" என்று தெரிவித்ததாக கூறப்பட்டது. ரஜினியின் இந்த முடிவுக்கு நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், அவரின் இந்த திடீர் முடிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.