சென்னை:ஆசிரியர் பணி நியமனங்களுக்கான வயது வரம்பை உயர்த்தி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துரித நடவடிக்கை மேற்கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான வயது வரம்பை உயர்த்தி, தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பள்ளிக்கல்வித் துறையின் கீழுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள, அனைத்து வகையான ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு விதிகள், முறையே விதி எண்.6(a), விதி எண்.5 மற்றும் விதி எண்.6இல் தெரிவிக்கப்பட்டுள்ள, உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது, “ஆசிரியர் பணி நியமனங்களுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பணிக்கு, ஓய்வு பெறும் வரையில் பணியில் சேரலாம் என இருந்தது. ஆனால் கடந்த காலங்களில் அதிமுக அரசு வயது வரம்பைப் பொதுப்பிரிவினருக்கு 40 வயது எனவும், இதரப் பிரிவினருக்கு 45 வயது எனவும் தன்னிச்சையாக அறிவித்தது.