சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஞானசேகரன், "திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஜி.கே. வாசன் தலைமையை ஏற்று இணைத்தேன். மேலும் அவரது கட்சியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவந்தேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திரு.வி.க. நகர், பூந்தமல்லி தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து மனு தாக்கல்செய்திருந்தேன். எனக்கு அனைத்துத் தகுதிகளும் இருந்தும் என்னை வேட்பாளராக கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவிக்கவில்லை.
ஆனால் தகுதி இல்லாத ஒருவரை கட்சியின் வேட்பாளராக நிற்க வைத்துள்ளார். எல்லா தகுதிகளும் உள்ள ஒருவருக்கு அரசியல் அதிகாரம் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவரது எண்ணமாக இருக்கிறது.
அவர் சாதியைப் பார்த்து அரசியல் கட்சி நடத்துகின்றார். எப்போதும் பட்டியலின மக்கள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோளாக உள்ளது. அவரை நம்பி பணியாற்றிவந்த கோவை தங்கம் போன்ற சிலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தமாகவிலிருந்து விலகிய ஞானசேகரன் திமுகவிற்கு ஆதரவு இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் மன சங்கடத்துடன் பணியாற்ற முடியாது என்பதால் எனது ஆதரவாளர்களுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன். மண்ணின் மைந்தர்களுக்குத் தமிழ்நாட்டில் பணி வழங்கப்படும் எனக் கூறியுள்ள திமுகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம்.
மேலும் ரயில்வே துறையில் பணியாற்றிவந்தபோது மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைவைத்தேன். அந்தக் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏற்கப்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.