சென்னை: எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக (Senior Manager) பணிபுரிந்தவர், வெங்கடேசன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்த நிலையில், அவரது நண்பர் ஆனந்த் என்பவர் மூலம் அறிமுகமான சுவாதீஸ்வரன் என்பவர், தான் சென்னை கப்பல் துறைமுகத்தில் உயர் பதவியில் உள்ளவர்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்கள் மூலம் வெங்கடேசனின் மகன் விஜயராகவனுக்கு துறைமுகத்தில் காலியாக உள்ள இளநிலை செயல் அலுவலர் (Junior Executive officer) வேலையைப் பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
பண மோசடி
மேலும் சுவாதீஸ்வரனின் மனைவி யாமினி (எ) அனிதா என்பவரும் சுவாதீஸ்வரனுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து, வெங்கடேசனிடம் கப்பல் துறையில் பணி புரியும் சில உயர் அலுவலர்கள் தங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பர்கள் என்றும்; அவர்கள் மூலமாக கட்டாயம் துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய வெங்கடேசன் சுவாதீஸ்வரன் கேட்டபோதெல்லாம் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி 2021 வரை பல தவணைகளில் மொத்தம் ரூ.54 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித்தராமல் தலைமறைவாகினர்.
இது தொடர்பாக வெங்கடேசன் சென்னை காவல் ஆணையர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.