சென்னை:கடந்த 18ஆம் தேதி மெரினாவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 8 பேரை சென்னை போக்குவரத்து காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பைக் சாகசத்தில் ஈடுபடக்கூடிய கும்பல் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒன்றிணைந்து ஒரு குழுவாக செயல்பட்டு வருவதை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும், இன்ஸ்டாகிராமில் உள்ள பல்வேறு பைக் சாகச குழுக்கள், தங்களுக்கென இன்ஸ்டா பக்கத்தை தொடங்கி, அவர்கள் செய்யும் சாகசங்களை பதிவேற்றம் செய்துவருவதும் தெரியவந்துள்ளது. பைக் சாகசம் செய்த இளைஞர் கைது செய்த பின்னரும், தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினருக்கு சவால்விடும் வகையில் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைக் வீலிங் :குறிப்பாக கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி அருகே ஐந்து பேர் சாகசத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பாடியில் இருந்து ராயபுரம் மேம்பாலம் வரை பைக் வீலிங்-இல் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வண்டி எண்களை வைத்து, அந்த ஐந்து பேரையும் காவல்துறையினர், மார்ச் 22ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் சென்னை காவல் துறையில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மீது, மரணத்தை விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட முயற்சித்தல் மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த நான்கு நாட்களில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் சிறார்கள். அவர்களிடமிருந்து 21 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இன்ஸ்டா குரூப் :குறிப்பாக இந்த பைக் வீலிங் கும்பல் இன்ஸ்டாகிராம் மூலமாக செயல்பட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கடந்த 18ஆம் தேதி பைக் வீலிங் ஈடுபட்ட கும்பல் கைதான பிறகு காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் தற்போது கைதாகி இருக்கக்கூடிய கும்பல் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறது. அதை வைத்துதான் இந்த கும்பலின் செயல்பாடுகள் குறித்து காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.