தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 21, 2020, 4:22 PM IST

ETV Bharat / state

முழு ஊரடங்கு : ஆள் அரவமற்று காணப்படும் சென்னை

சென்னை : கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று (ஜூன் 21) ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகனங்கள் ஏதுமின்றி சென்னை மாநகரம் அமைதியாகக் காணப்பட்டது.

thorough lockdown in chennai due to corona
thorough lockdown in chennai due to corona

கரோனா தொற்று தமிழ்நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இந்தத் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நோய்த் தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் தொற்று பரவுவதைத் தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த முழு ஊரடங்கு வெள்ளிக்கிழமை (19-06-2020) அன்று அமலுக்கு வந்த நிலையில், மக்கள் தேவையற்று வெளியே சுற்றுவதைக் கண்காணிக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆள் அரவமற்று காணப்படும் சென்னை கத்திப்பாரா மேம்பாலம்

இந்த 12 நாள்களில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் அத்தியாவசியப் பொருள்களுக்காகக் கூட கடைகளைத் திறக்கக்கூடாது என்றும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்கள் வெளியே வராமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியும் அமைதியாகவும் காணப்பட்டது.

இதில் குறிப்பாக, கத்திப்பாரா மேம்பாலத்தில் நேற்று முந்தினம் முதல் குறைந்த அளவிலான வாகனங்களே வந்து செல்கின்றன. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் என அனைத்து பகுதிகளுக்கும் இந்த மேம்பாலம் வழியாக மட்டுமே செல்ல முடியும் என்பதால் சாதாரண நாள்களில் ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தப் பாலம் வழியாகக் கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடப்பதால் இந்த கத்திப்பாரா மேம்பாலம் வெறிச்சோடி உள்ளது. இதேபோல், இந்த 12 நாட்களும் ஊரடங்கைக் கடைப்பிடித்தால் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி விடலாம் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க... திமுகவில் கரோனாவால் உயிரிழந்த அடுத்த முக்கிய பிரமுகருக்கு ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details