தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2019, 10:40 AM IST

Updated : Oct 4, 2019, 11:27 AM IST

ETV Bharat / state

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று மறுஎண்ணிக்கை

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான மின்னனு வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் இன்று காலை 11.30 மணியளவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது.

hc

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 ஓட்டுகளும், தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 69,541 ஓட்டுகளும் பெற்று 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

எம்.எல்.ஏ. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தேர்தல் அலுவலர்களால் நிராகரிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளை மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதி தேர்தலில் எண்ணப்பட்ட 19,20,21 ஆகிய சுற்று மின்னனு வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஏதுவாக பதிவான வாக்குகளை நீதிமன்ற பதிவாளரிடம் அக்டோபர் 4ஆம் தேதி சமர்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை 11.30 மணியளவில், மின்னனு வாக்குப்பதிவு மற்றும் தபால் வாக்குகளை பதிவாளரிடம் ஒப்படைக்கவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த 24 தேர்தல் அலுவலர்களை நியமித்தும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து மின்னனு வாக்கு எந்திரங்கள் மற்றும் தபால் வாக்கு சீட்டுகள் நீதிமன்றத்திற்கு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் படி காலை 11.30 மணியளவில் பதிவாளர் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். அறிக்கையின் அடிப்படையில் வழக்கில் நீதிபதி தீர்ப்பை அறிவிப்பார்.

இதையும் படிங்க:சுபஸ்ரீ உயிரிழந்த சுவடு மறைவதற்குள் பேனர் வைக்க அனுமதி

Last Updated : Oct 4, 2019, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details