சென்னை: ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜி(45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஆட்டோக்களுக்கு ரீப்பர் அடிக்கும் வேலை பார்த்து வந்த ராஜி, மதுபோதைக்கு அடிமையாகி தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜியை அவரது மனைவி கலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராயப்பேட்டை வெஸ்கோஷ் சாலையிலுள்ள சென்னை கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ராஜி மீண்டும் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதையடுத்து மீண்டும் ராஜி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனைவி கலா நேற்று(மே 2) மீண்டும் ராயப்பேட்டை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்தி, கலாவை தொடர்பு கொண்டு கணவர் ராஜி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மரணத்தில் மர்மம்:இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கலா, உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது கணவர் ராஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கலா தனது கணவரின் உடலைப் பார்த்த போது முகம், உடலில் பலத்த காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார்.
தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய கலா, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து போதை மறுவாழ்வு மைய மேலாளர் மோகன், ஊழியர் ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.