தமிழ்நாடு

tamil nadu

பறிக்கப்பட்ட உரிமைகள் திமுக ஆட்சியில் மீட்கப்படும் - ஸ்டாலின்

By

Published : Apr 2, 2021, 12:47 PM IST

பறிக்கப்பட்ட உரிமைகள் திமுக ஆட்சியில் மீட்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு காணொலி வாயிலாக உறுதியளித்துள்ளார்.

The rights taken away by the DMK regime will be restored- Stalin
The rights taken away by the DMK regime will be restored- Stalin

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டுவரும் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாக மக்களுக்கு சில உறுதிமொழிகள் வழங்கியுள்ளார்.

அப்போது பேசிய அவர், "இந்தத் தேர்தல் திமுகவிற்கும் ஆளும் அதிமுக அரசுக்கும் எதிரான போட்டி அல்ல; இது தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம். தமிழ்நாட்டில் நோட்டாவைவிட குறைவான வாக்குகளைப் பெறும் கட்சி இன்று, தமிழ்நாட்டின் ஆளும் கட்சியை மிரட்டி மாநில உரிமைகளைப் பறிக்கிறது.

நம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசாங்க வேலைகளை வட மாநிலத்தவர்களுக்கு அளிக்கின்றனர். நீட் போன்ற தேர்வுகள் மூலம் நமது பிள்ளைகளை கல்வி கற்க இயலாமல் செய்கின்றனர். உழவர்களின் நிலத்தை அபகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கின்றனர். எதிர்த்து போராடுபவர்கள் அடித்துத் துரத்தப்படுகின்றனர்.

நாம் என்ன மொழி பேச வேண்டும், என்ன உணவு உண்ண வேண்டும். யாரை திருமணம் செய்ய வேண்டும். நம் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கின்றனர். அதனைத் தட்டிக்கேட்க வேண்டியவர்கள் காலில் விழுந்து கிடக்கின்றனர். இவற்றைத் தொடர அனுமதித்தால் நமது வளம், மொழி, சுயமரியாதை, சமூகநீதி, அடையாளங்கள் சிதைந்துபோக நேரிடும்.

பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்கப்படும்

இதனைத் தடுக்க நாம் அவர்களை எதிர்க்க வேண்டும். அதற்கு உங்கள் ஓட்டுதான் ஆயுதம். திமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்கப்படும். மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும். சட்டம் ஒழுங்கு நேரடி கண்காணிப்பில் இருக்கும். தவறு செய்பவர் எவராக இருப்பினும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதுவாயினும் அது தடைசெய்யப்படும். என் சுயநலத்திற்காக யார் காலிலும் விழ மாட்டேன். தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். இந்த உறுதிமொழிகளை நான் மீறினால் என்னை நேரடியாகக் கேள்வி கேளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details