சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் எஸ். பார்த்திபன். இவர் கிண்டி காவல் நிலையத்தில் மே 31ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 'தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2016ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டேன். திமுக சார்பில் முன்னாள் சென்னை மேயர் மா. சுப்பிரமணியன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் பொய்யான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அந்த மனுவில் கிண்டி தொழிலாளர் காலனியில், மா. சுப்பிரமணியனின் மனைவி காஞ்சனா பெயரில் வீடு, சிட்கோ நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாக பொய் தகவல் கூறியுள்ளார். உண்மையில் இந்த நிலம் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு 1959ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. எஸ்.கே கண்ணன் 2015ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.
மா.சுப்பிரமணியம் 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சென்னை மேயராக பதவி வகித்தார். அப்போது சில முக்கிய ஆவணங்களை தன் அதிகாரத்தைக் கொண்டு திருத்தியுள்ளார். அதில் ஒன்று, எஸ்.கே கண்ணனின் வாரிசாக தன் மனைவி காஞ்சனா பெயரை சேர்த்துள்ளார். பின்னர், தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தன் மகள் காஞ்சனாவுக்கு மாற்றிக் கொடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு எஸ்.கே. கண்ணன் கோரிக்கை மனு கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் அந்த சொத்து காஞ்சனா பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளார். அதாவது அரசு நிலத்தை மோசடியாக கையகப்படுத்திக் கொண்டார்.
ஆனால், மா.சுப்பிரமணியத்தின் மனைவி காஞ்சனாவின் கடவுச்சீட்டில், தந்தை பெயர் சாரங்கபாணி என்று உள்ளது. மா.சுப்பிரமணியம் தாக்கல் செய்த வேட்புமனுவில், காஞ்சனாவின் தந்தை பெயர் சக்கரபாணி என்றுதான் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு இடத்திலும், எஸ்.கே. கண்ணன்தான் காஞ்சனாவின் தந்தை என்று இல்லை. ஆனால், மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் போலியான ஆவணங்களைக் கொண்டு, அரசு சொத்தை அபகரித்துள்ளனர். எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை பெற்றக் கொண்ட காவல் துறையினர் மா.சுப்பிரமணியம், காஞ்சனா ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன் பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தம்பதி இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘இவர்களுக்கு முன் பிணை வழங்கக் கூடாது’ என்று கடும் ஆட்சேபனை தெரிவித்து வாதம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த முன் பிணை மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று புகார்தாரர் பார்த்திபன் தரப்பில் முறையிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இந்த மனு மீதான விசாரணையை இன்று (ஜூன் 12) தள்ளி வைக்கிறேன். அதுவரை மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்யக்கூடாது. இந்த முன்ஜாமீன் மனுவுக்கு காவல்துறை தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதேபோல் இவர்களுக்கு முன் பிணை கொடுக்கக்கூடாது என்று புகார்தாரர் பார்த்திபனும் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.