சென்னை:பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பழங்கள், முட்டை, ரொட்டி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வாகனங்கள், தள்ளு வண்டிகளில் வைத்து குடியிருப்பு பகுதிகளுக்கே நேரில் சென்று விற்பனை செய்ய, சென்னை மாநகராட்சி, வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வியாபாரிகளின் வாகனப் போக்குவரத்திற்காக பதாகைகள், ஸ்டிக்கர்கள், வாகன அனுமதி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை, மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய 4,122 சில்லரை வணிகர்களுக்கும், 655 சூப்பர் மார்கெட் அங்காடிகள், 457 மொத்த வியாபார வணிகர்களுக்கும் என மொத்தம் 5,234 வணிகர்களுக்கும் பதாகைகள், ஸ்டிக்கர்களுடன் வாகன அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியால் நேற்று (ஜூன்.01) மாதவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் கள ஆய்வு மேற்கொண்டதில் உத்தேச சில்லறை விற்பனை விலையைவிட அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த நான்கு வியாபாரிகளிடமிருந்து பதாகைகள், ஸ்டிக்கர்கள், வாகன அனுமதி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலைப்பட்டியல் மற்றும் இதர புகார்கள் சம்பந்தமாக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்துக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 94999 32899 என்ற கைபேசி எண் மற்றும் ஐந்து இணைப்புகளுடன் கூடிய 044-4568 0200 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இதுவரை இந்தக் கட்டுபாட்டு அறை எண்களில் 1,139 புகார்கள் வரை பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:’சந்தை விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய இயலாது’ - வியாபாரிகள் சங்கம்