சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஆற்றின் கரையோரங்களில் வசித்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
ஆனாலும் அவர்கள் மேற்படி பகுதிகளில் வசிக்க முடியாத காரணத்தால் மீண்டும் தங்களை நகரின் மையப்பகுதியில் குடியமர்த்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி, அடையாறு ஆறு தூர்வாரப்பட்டு வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை மறுகுடியமர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
இவர்களின் வாழ்வாதாரம் நகரின் மையப் பகுதியில் இருப்பதால் நகருக்குள்ளே வீடுகளை ஒதுக்கி மறுகுடியமர்வு செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசுத் தரப்பில் அவர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக திருநீர்மலை முதல் முகத்துவாரம் வரை 25 கிமீ அடையாறு ஆற்றை தூர் வாரும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
சுமார் 11,400 ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றினை அகலப்படுத்துதல், ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளத் தடுப்புகளை அமைத்தல், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 1,800 மீட்டர் நீளத்திற்கு கான்க்ரீட் வெள்ளத் தடுப்பு சுவர் அமைத்தல், எட்டு இடங்களில் வெள்ளத்தடுப்பு உள்வாங்கிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகரின் நதிகள் சீரமைப்பு திட்டத்தின் அடிப்படையில், சென்னை கோட்டூர்புரத்தில் ஏழு கோடி ரூபாயில் பூங்கா ஒன்று அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.