சென்னை:வெள்ளியிலான முத்திரைக் காசு (Punch Marked Coin) ஒன்று கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு நாள்தோறும் புதிது புதிதான பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கீழடி அகழாய்வு என்பது தேவையற்ற ஒன்று என ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளி வந்திருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘கீழடி அகழாய்வு தொடர்ந்து நடைபெறுவதால் தமிழர்களின் தொன்மை, வரலாறு ஆகியவை பற்றிய பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த உண்மைகள் வெளி வருவதால் ஒரு சிலருக்கு வயிறு எரிகிறது.
அவர்கள் வயிறு வேண்டுமானால் எரிந்துவிட்டு போகட்டும். நாங்கள் தொடர்ந்து இந்த அகழாய்வு மேற்கொள்வோம். அறிஞர் அண்ணா கூறியது போல தமிழ் நாகரிக பண்பாட்டு தீ அகிலமெல்லாம் பரவட்டும். தமிழர் உணர்வு பொங்கட்டும்! பொங்கட்டும்’என்று கூறினார்.
இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வுகள் மூலம் கீழடி நகரத்தின் தொன்மைக்கு சான்று கிடைத்துள்ளது. கீழடி நகர நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஒரு வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது.