தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவ்வரிசி கலப்படம்: அறிக்கைத் தாக்கல்செய்ய உணவுத் துறைக்கு உத்தரவு

கலப்படம் செய்து சவ்வரிசி விற்கப்படுகிறதா என ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை தாக்கல் செய்ய உணவுதுறைக்கு உத்தரவு
அறிக்கை தாக்கல் செய்ய உணவுதுறைக்கு உத்தரவு

By

Published : Oct 6, 2021, 1:27 PM IST

சென்னை:நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், “சவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வேளாண்மை செய்யப்பட்டுவந்தது.

இந்நிலையில் சவ்வரிசி உற்பத்திக்காகப் பலவிதமான வேதிப்பொருள்களைக் கலந்து கலப்பட சவ்வரிசியைப் பலர் விற்பனை செய்வதால், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்பவர்களும், இயற்கையாக சவ்வரிசி உற்பத்தி செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலப்பட சவ்வரிசி

சவ்வரிசி உற்பத்திக்கு வேதிப்பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி உணவுப் பாதுகாப்புத் துறைக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத நிலையில் 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்ததில், சவ்வரிசி உற்பத்தி செய்வது தொடர்பாகவும், கலப்படத்தைத் தடுக்கவும் நீதிமன்றம் பல உத்தரவுகளை வழங்கியது.

இந்நிலையில் உணவுத் துறையினர் ஈரப்பதத்துடன் இருக்கும் மரவள்ளிக் கிழங்கு மூலம்தான் வேதிப்பொருள்கள் கலக்கப்பட்டு கலப்பட சவ்வரிசி செய்வதாகக் கூறி அதனை விற்பனை செய்வதற்குத் தடைவிதித்ததோடு, அதை வைத்திருக்கும் ஆலைகளையும் சீல்வைத்தனர்.

சவ்வரிசி கலப்படத்தைத் தடுக்க உணவுத் துறையின் இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

உணவுத் துறைக்கு உத்தரவு

இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் முகிலன் சவ்வரசி மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி ஒன்பது வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மூன்று வகையான சவ்வரிசி பாக்கெட்டுகளை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த நீதிபதி, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் வழங்கினார். இந்த மாதிரிகளை கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வுசெய்து கலப்படம் உள்ளதா என்பது குறித்த ஆய்வறிக்கையைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளை (அக்டோபர் 7) தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க : ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் 😱

ABOUT THE AUTHOR

...view details