தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்வில் தேர்ச்சிபெறாத 1500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்!

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500-க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்

By

Published : Apr 28, 2019, 4:11 PM IST

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டிற்கு இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்த வேண்டும் என மத்திய அரசு கடந்த 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதி உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தியது. தமிழ்நாட்டில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், ஆசிரியர் பணியில் சேரும் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் பல ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 23.8.2010 ஆம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 1,500க்கு மேற்பட்டவர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள் வேலாயுதம், சித்ராதேவி ஆகியோர் 15.6.2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஜூன் 1 ஆம் தேதி பள்ளி திறப்பதற்கு முன்பே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களும் வரும் கல்வியாண்டில் பணியில் நீடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details