சென்னை:தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று, நான்கு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் விஷயம் கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் பரிசுப் பெட்டக தொகுப்பில் "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" வழங்காமல் தனியார் தயாரிப்பான "Pro PL ஹெல்த் மிக்ஸ்" வழங்க ஒப்பந்தம் போடப்பட்டதால், அரசுக்கு 77 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு உண்மை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜூன் 8)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது ஆவினில் ஹெல்த் மிக்ஸ் என்கிற பொருளே கிடையாதே பின்னர் எப்படி இது சாத்தியமானது? என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் களத்தில் இறங்கினோம்.
ஆவினில் பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல் சேகரித்ததில் ஆவினில் அப்படி ஒரு ஹெல்த் மிக்ஸ் என்கிற பொருள் உற்பத்தியே இல்லை என்பதும், இல்லாத பொருளை முன் வைத்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திட்டக்கமிஷன் ஆலோசனை கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் தரப்பில் கலந்துகொண்ட ஆவின் பொது மேலாளர் ராஜேந்திரன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் "Pro PL ஊட்டச்சத்து" பொருளுக்கு மாற்றாக "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" வழங்கிட பரிந்துரை செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
ஆவினில் ஊழல் புரையோடிப் போயுள்ளது: ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சி தொடங்கி தற்போதைய திமுக ஆட்சி வரை ஆவினில் ஊழல், முறைகேடுகள் புரையோடிப் போயிருக்கும் நிலையில் "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" குறித்து பொது மேலாளர் ராஜேந்திரன் எதன் அடிப்படையில் சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தார்? என்ற சந்தேகம் வலுத்தது.
ஒருவேளை கடந்த காலங்களில் ஆவினில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் போல தற்போது "டெய்ரி ஒயிட்னரை ஆவின் ஹெல்த் மிக்ஸ் என்று கூறி அதை வைத்து மிகப்பெரிய அளவில் முறைகேடுகள்" செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதா? என தெரியாததாலும் ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத ஒரு பொருளை அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பரிசுப் பொருள் பெட்டகத்திற்கு பரிந்துரை செய்ய துறைசார்ந்த அமைச்சர், அரசு செயலாளர், கமிஷனர், நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு தெரியாமல் ஒரு பொது மேலாளரால் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவெடுத்திருக்க முடியாது என்பதாலும் அவரை அவ்வாறு இயக்கியது யார்? என கேள்வி எழுந்தது.
பின்னால் இருந்து முறைகேடுகள் செய்ய திட்டமிட்டது யார்? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் தான் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.