தமிழ்நாடு

tamil nadu

"தருமபுரி காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் " - அன்புமணி ராமதாஸ்

By

Published : Sep 23, 2020, 4:04 PM IST

சென்னை : தருமபுரி மாவட்டத்தை செழிப்பாக்க காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவித்து, அதற்கான நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

"தரும்புரி காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் " - அன்புமணி ராமதாஸ்
"தரும்புரி காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் " - அன்புமணி ராமதாஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ரூ.14,000 கோடி மதிப்பிலான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, தருமபுரி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் என்ன தயக்கம்? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உள்பட மொத்தம் 1,230 நீர்நிலைகள் உள்ளன. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரித் தண்ணீரை குழாய்கள் மூலம் கொண்டுவந்து 1,230 நீர்நிலைகளிலும் நிரப்புவது தான் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் ஆகும்.

காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.650 கோடி மட்டும் தான். இது காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான செலவில் வெறும் 4.64% மட்டும் தான். அதேநேரத்தில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தால் பயனடையும் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்; 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.

காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழித்து, வேலைவாய்ப்புகளும், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் ஏற்படும்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் தருமபுரி மாவட்ட மக்களிடம் 10 லட்சத்துக்கும் கூடுதலான கையெழுத்துகளைப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாமக ஒப்படைத்தது.

2019ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து காவிரி உபரி நீர் பாசனத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.

பாமகவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, மக்களவைத் தேர்தலின் போது தருமபுரி தொகுதியில் என்னை ஆதரித்து பரப்புரை செய்த போது, காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று 9 இடங்களில் உறுதி அளித்தார். ஆனால், தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

பின்தங்கிக் கிடந்த எத்தனை மாவட்டங்கள் முன்னேறின என்பது தான் ஓர் ஆட்சியின் செயல்பாட்டை அளவிடுவதற்கான முக்கியக் காரணியாகும். தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தான் தமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சி என்று போற்றப்படும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தை செழிப்பாக்குவதற்கான காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து, அதற்கான நிதியையும் முதலமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என அதில் வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details