சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்ரல் 5) செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், "போக்குவரத்து துறைக்கென தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தும் பணி சோதனை முறையில் சில பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் இரண்டாயிரம் பேருந்துகளிலும் பயணிகளின் முகங்களை அறியும் வகையிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண தொழிற்சங்கங்களுடனான கூட்டத்தொடருக்குப் பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: தொடர்ந்து பேசிய அவர், "புதிய பேருந்துகள் வாங்குவது குறித்து ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் புதிய பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை" என்றார்.
மேலும் அவர், 'தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் பைக்குகளில் ஏற்படும் திடீர் தீ விபத்துகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவருவதற்கு தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. பேருந்துப் பயணம், பயணத்தில் ஏற்படும் இடர்ப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை புகாராகத் தெரிவிக்க துறைக்கென தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பட்டன்கள் ஆகியவற்றை கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்' என்றார்.
இதையும் படிங்க: அப்போ வேலூர், இப்போ அம்பத்தூர்.. தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து வரும் எலக்ட்ரிக் பைக் .. அச்சத்தில் வாகன ஓட்டிகள்..