சென்னை:கரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகள் நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கரோனா 3ஆவது அலையின் காரணமாக ஜனவரி மாதத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
அதன்பின் மார்ச் மாதம் 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. பொதுத்தேர்வினை எழுதாமல் நேரடியாக 11,12ஆம் வகுப்பிற்கு வந்துள்ள மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு, மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்ள 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதில் நடத்தி முடிக்கப்பட்ட அலகுகளில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.
இதனை அடிப்படையாகக் கொண்டு 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.