ராமநாதபுரம், மதுரை, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 11 பேர் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓமன் நாட்டிற்கு கூலி வேலைக்காகச் சென்றனர்.
அங்கு கடந்த 6 மாதங்களாக அவர்களுக்கு சரியான வேலை இல்லாமல், குறைவான சம்பளத்தில் தங்க இடமின்றி உணவு இல்லாமல் தவிப்பதாகக் கண்ணீர் மல்க காணொலி ஒன்றை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்தக் காணொலியைப் பார்த்த தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரக இயக்குநர் தினேஷ் பொன்ராஜ், தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரகத்தின் மூலம் ஓமனில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தூதரக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட 11 தொழிலாளர்களையும் மீட்டனர்.
சென்னை திரும்பிய ஓமனில் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர்கள் இதையடுத்து மீட்கப்பட்ட 11 தமிழ்நாடு தொழிலாளர்களும் ஓமனிலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரக இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் தொழிலாளர்களை வரவேற்றனர். பின்னர் 11 பேரும் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகன வசதி செய்து தரப்பட்டது.
இதையும் படிங்க:ஈரானில் கடும் கட்டுப்பாடு: வெளியேற முடியாமல் தவிக்கும் மீனவர்கள்