சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது, "கடந்த அதிமுக ஆட்சியில் அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் பால் கொள்முதல் , விற்பனை, அலுவலக ஸ்டேசனரி பொருட்கள் வாங்கியது, பணியாளர்கள் நியமனம், உப பொருட்கள் உற்பத்தி என அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளிக்கொண்டு வந்தது.
மோடி எங்களது டாடி
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி முதல் ராஜேந்திர பாலாஜி வரை அனைவரது மோசடிகளையும் வெளிக் கொண்டு வந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் 30 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறியபோது பால் பதிவு அலுவலரும், விசாரணை அலுவலருமான அலெக்ஸ் ஜீவதாஸ் எந்த ஒரு முறைகேடுகளும் நடைபெறவில்லை என அறிக்கை அளித்தார். தமிழ்நாட்டில் ஆட்சி மாறியுள்ள நிலையில், தன்னை தற்காத்துக் கொள்ள தற்போது சுமார் 13.71 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக முன்னுக்குபின் முரணான அறிக்கையை அலெக்ஸ் ஜீவதாஸ் அளித்திருக்கிறார்.
நிர்வாகம் துணை போகிறதோ?
மேலும் சென்னை இணைய விற்பனை பிரிவில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போகவும், அவர் காரணமாக இருந்திருப்பதாக தகவல்கள் வருகிறது.
கோப்புகளை பராமரிக்கும் பொறுப்பு அலுவலர்கள் மீது இதுவரை ஆவின் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஊழல் செய்தவர்களை காப்பாற்ற ஆவின் நிர்வாகம் துணை போகிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பால் கொள்முதல் ஊழல்
கடந்த அதிமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜியின் பினாமியான அலெக்ஸ் ஜீவதாஸ், கிறிஸ்துதாஸ் ஆகியோரை தற்போது விசாரணை அலுவலர்களாக நியமனம் செய்திருக்கும் போது, அங்கே ஆவணங்கள் காணாமல் போவதில் என்ன வியப்பு இருக்க முடியும்.
ஆவினில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருப்பதை கண்டறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததில் பால்வள கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குநர் பிரமிளா பங்களிப்பு அளப்பரியது. அவர் சிறந்த முறையில் செயல்பட்டதால் தான் பால் கொள்முதல் ஊழல், C/F ஏஜென்ட் முறைகேடுகள், தனியார் பால் நிறுவனங்களோடு மறைமுக கூட்டு வைத்து நடைபெற்ற முறைகேடுகள் தெரியவந்தது.
ராஜேந்திர பாலாஜியின் பினாமி
ஒருவேளை அவர் சரியாக செயல்படாமல் இருந்திருந்தால் ஆவினில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் ஒட்டுமொத்தமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும். ஆவின் நிறுவனத்தின் அழிவை எவராலும் தடுக்க முடியாமல் போயிருக்கும்.
ஆனால் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்ட அலுவலர்கள் தங்களையும், ராஜேந்திர பாலாஜியையும் காப்பாற்றிக் கொள்ள முயல்கின்றனர். அதாவது, பல கோடி ரூபாய் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை தொலைத்து விட்டோ அல்லது தொலைந்து போக செய்து விட்டோ தற்போது அதன் பழியை பால்வள கூட்டுறவு தணிக்கைத் துறை இயக்குநர் பிரமிளா, ஆவின் நிறுவனத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய ஆவின் அலுவலர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணமாகி விடும்.
முறைகேடாக நியமிக்கப்பட்ட பணியிடங்கள்
எனவே பால்வளத்துறை தலைமை அலுவலகம் மற்றும் ஆவின் இணையத்தின் தலைமை அலுவலகத்தில் உயர் பொறுப்பில் உள்ள அலுவலர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட வேண்டும். அவர்கள் மீது சட்டரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டால் மட்டுமே பால்வளத் துறையை சீர்படுத்த முடியும்.
ஆவினில் கடந்த ஆட்சியின் போது முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பணியிடங்களும், நிறுத்தி வைத்துள்ள 147 பணியிடங்களும் முழுமையாக ரத்து செய்யப்படாமலேயே இருக்கிறது.
மோசடி பேர் வழிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முறைகேடுகளை சுட்டி காட்டிய அலுவலகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருப்பது, திருட்டு செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கையும் களவுமாக பிடித்த காவலர் மீதும், குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி மீதும் நடவடிக்கை எடுப்பது போன்றதாகும்" என்றார்.
இதையும் படிங்க:'அபராதத் தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை' விஜய் தரப்பு!