சென்னை: உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறையின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தபோது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007ஆம் ஆண்டு விதிகளின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தாமாக பணிகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளாட்சிகளில் முறையான மக்களாட்சி மலர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.
அதன்படி, அப்போது கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் வரையிலுமான பணிகளை உரிய ஊராட்சிகளின் தீர்மானத்தின் மூலம் தாமாகவே தேர்வு செய்து செயல்படுத்திட அதிகாரம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு எந்தவொரு மாற்றமும் இன்றி தற்போது வரை அதே நிதி அதிகாரம் வழங்கும் நடைமுறையே இருந்து வருகிறது. இந்த அரசு பதவியேற்றவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.