தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2023: 1,000 பேருந்துகள் கொள்முதல்.. 500 பேருந்துகள் புதுப்பிப்பு.. ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு..

தமிழ்நாடு பட்ஜெட்டில் 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும், 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

By

Published : Mar 20, 2023, 3:12 PM IST

சென்னையில் 1,000 புதிய பேருந்துகள்
சென்னையில் 1,000 புதிய பேருந்துகள்

சென்னை:தமிழ்நாட்டின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநில நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதில், போக்குவரத்து துறைக்காக 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும், 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், ரூ.500 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், "நகரங்களில் தற்போது உள்ள பேருந்து பணிமனைகள் முக்கிய இடங்களில் அமைந்திருந்தாலும், அவற்றின் முழுப் பயன்பாடு வெளிக் கொணரப்படவில்லை. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், பேருந்து பணிமனைகளை உயர்தர போக்குவரத்து மையங்களாக தரம் உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக, ரூ. 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக, தாம்பரம், திருவொற்றியூர், சைதாப்பேட்டையில் உள்ள 3 பணிமனைகள் ரூ. 1,347 கோடி முதலீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக பேருந்துகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

ஆகவே, 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும், 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மதிப்பீடுகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நம் மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் ரயில்வே துறையின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையைச் சரிசெய்ய, இந்திய ரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து, மாநிலத்தில் புதிய ரயில் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்திட, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (TIDCO) இணைந்து ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்க உள்ளது. இந்த மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 8,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் 625 வழித் தடங்களில் சுமார் 3,436 அரசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் நாள்தோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். அதோடு, மகளிருக்கான கட்டணம் இல்லா பயணம், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பஸ்-பாஸ், முதியவர்களுக்கான சிறப்பு சலுகை, 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பாஸ் உள்ளிட்ட திட்டங்கள் அமலில் உள்ளது.

இதையும் படிங்க:செப்.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details