சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழாவில் மு.க. ஸ்டாலின் பேசும்போது, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வருக வருக என்று நானும் முதலமைச்சர் என்கிற முறையில் வரவேற்கிறேன்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்வது என்பதை ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நான் கருதவில்லை. எங்களையெல்லாம் ஆளாக்கிய மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மருத்துவக் கல்லூரிக் கனவின் அடையாளம்தான் இந்தப் பல்கலைக்கழகம்.
1987ஆம் ஆண்டின் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக (சென்னை) சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தாலும் இதற்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற பெயரைச் சூட்டியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இப்பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற 643 கல்வி நிறுவனங்களில், சுமார் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பயின்றுவருகின்றனர் என்றால், இதைவிட பெருமை வேறு எதுவும் நிச்சயமாக இருக்க முடியாது. ‘மருத்துவக் கல்விப் புரட்சி’யின் மகத்தான அடையாளமாகத் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. கல்வியையும் - ஆராய்ச்சியையும் இரண்டு கண்களாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முன்மாதிரி பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமானது, கரோனா காலத்தில் மிகச் சிறந்த சேவையை ஆற்றியிருக்கிறது. கரோனாவைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டது. கரோனா காலத்து மனச் சிக்கலை நீக்குவதற்காக பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை இணையம் மற்றும் தொலைபேசி வழியாகச் சேவையாற்றி இருக்கிறது. கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கள், செவிலியர் மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். எட்டாயிரத்து 400 மாணவர்கள் இதற்கான சிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர். இத்தகைய விழிப்புணர்வுப் பணி தொடர வேண்டும்.
நாட்டுக்குச் சேவையாற்ற அன்புடன் அழைப்பு
உங்களில் பலருக்கு மருத்துவம் என்பது, உங்களது கனவாகவோ – சிலருக்கு, பெற்றோர் – உறவினர்கள் கனவாகவோ இருந்திருக்கும். ஆனால், மருத்துவம் படிக்க நீங்கள் கல்விச்சாலைக்குள் நுழையும்போது அது அந்தக் கல்விச்சாலையின் கனவாக மாறிவிடுகிறது.
மருத்துவப் பட்டத்தை நீங்கள் பெற்ற பிறகு, அது இந்த நாட்டின் கனவாக மாறுகிறது! அந்த அடிப்படையில் பார்த்தால் தனிமனிதர்களாக இருந்த நீங்கள், இன்றுமுதல் நாட்டுக்குச் சேவையாற்றும் மாபெரும் மனிதர்களாக மாறுகிறீர்கள்.
அத்தகைய மாபெரும் மனிதர்களாகிய உங்களை இந்த நாடு வரவேற்கிறது. அதேபோல தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில் உங்களை நாட்டுக்குச் சேவையாற்ற அன்போடு அழைக்கிறேன்.
மருத்துவம் என்பது வேலை அல்ல; அது ஒரு சேவை! மதிப்பும், மரியாதையும், போற்றுதலும், பாராட்டுதலும் உள்ள சேவையைத்தான் நாளை முதல் நீங்கள் தொடங்க இருக்கிறீர்கள்.
இரவு பகல் பாராது, மழை வெயில் பாராது, ஆண் பெண் பேதம் இல்லாமல், இந்தச் சாதி - அந்த மதம் என்ற பேதம் இல்லாமல், ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை பாராது, தனக்கு முன்னால் இருப்பது ஒரு உயிர் என்ற உன்னதமான எண்ணத்தோடு அந்த உயிரைக் காக்கும் கடமையை நீங்கள் செய்யப் போகிறீர்கள்.
இதுவரை உங்கள் வீட்டுக்குப் பிள்ளையாக இருந்த நீங்கள் இனி இந்த நாட்டுக்குப் பிள்ளையாக மாறப் போகிறீர்கள். உங்களுக்கு நான் அதிகப்படியான அறிவுரைகளை சொல்லத் தேவையில்லை. பெரிய படிப்பை - பெரிய பெரிய புத்தகங்களைப் படித்தவர்கள் நீங்கள்.
என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள். அதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். அதைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடியுங்கள். அந்த உடலுக்கு பொருத்தமான வழிமுறையைச் சொல்லுங்கள்.